search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வக்கீல் கைது"

    • இந்திய வம்சாவளியான அபிஜித் தாஸ் வக்கீலாக வேலை பார்த்து வருகிறார்.
    • கடந்த 2021-ம் ஆண்டு அபிஜித் தாஸ் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் வடக்கு அண்டோவர் பகுதியை சேர்ந்தவர் அபிஜித் தாஸ் (வயது 50). இந்திய வம்சாவளியான இவர் அங்கு வக்கீலாக வேலை பார்த்து வருகிறார். அப்போது இவர் சிலரிடம் பணமோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

    இந்தநிலையில் இவர் தன்னிடம் வழக்கு தாக்கல் செய்ய வந்தவர்களின் வங்கி கணக்கில் இருந்து 2.7 மில்லியன் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.40 கோடி) தனது வங்கி கணக்கு மாற்றியது தெரிய வந்தது. இதனையடுத்து அபிஜித்தை போலீசார் கைது செய்தனர். பண மோசடி குற்றச்சாட்டில் சிக்கி உள்ளதால் இவருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை, ரூ.2 கோடி அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு இவர் அமெரிக்காவின் எம்.பி. தேர்தலில் போட்டியிட்டார். அப்போது தேர்தல் பிரசார விதிகளை மீறுதல், தவறான அறிக்கை தாக்கல் செய்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர் ஏற்கனவே கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களாக உடல் சோர்வு ஏற்பட்டதோடு குழந்தை இரவில் வலியால் துடித்துள்ளார்.
    • பெற்றோர் விசாரித்தபோது மழலை மொழியில் தனக்கு நடந்தது குறித்து குழந்தை தெரிவித்துள்ளது.

    குளித்தலை:

    கரூர் மாவட்டம் குளித்தலை அருகேயுள்ள இனுங்கூர் காஜா காலனி பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் பவுனு என்கின்ற பழனியப்பன் (வயது 55). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் இருக்கும் நிலையில் கருத்துவேறுபாடு காரணமாக முதல் மனைவியை விவாகரத்து செய்து விட்டார்.

    தற்போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டு மனைவியுடன் குடும்பம் நடத்தி வருகிறார். சபல புத்தி கொண்ட இவர் சிறுமிகளிடம் எல்லை மீறுவதையும், அவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதையும் வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

    இவரது வீட்டிற்கு பக்கத்து வீட்டில் வசிக்கும் தம்பதியினர் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகிறார்கள். காலையில் அவர்கள் வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்களுக்கு 3 வயதில் ஒரு மகள் உள்ளார். அந்த சிறுமி அங்குள்ள அங்கன்வாடி மையத்திற்கு சென்றுவிட்டு மதிய நேரத்தில் வீடு திரும்புவாள்.

    அப்போது வீட்டில் தனியாக இருக்கும் சிறுமியிடம் பெற்றோர் யாரும் இல்லாத நேரத்தில் அவரது வீட்டிற்கு சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். பக்கத்து வீட்டில் வசிப்பவர், 50 வயதை தாண்டியவர் என்பதால் அக்கம் பக்கத்தினர் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

    இதற்கிடையே கடந்த சில நாட்களாக உடல் சோர்வு ஏற்பட்டதோடு, இரவில் வலியால் துடித்துள்ளார். பெற்றோர் விசாரித்தபோது மழலை மொழியில் தனக்கு நடந்தது குறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து வழக்கறிஞர் பழனியப்பனை கைது செய்தனர். பின்னர் குளித்தலை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதேபோல் திருச்சி அருகே 10 வயது சிறுமிக்கும் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. திருச்சி மாவட்டம் முசிறி அருகேயுள்ள ஆராய்ச்சி கிராமம் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ் (39). இவர் முசிறியில் உள்ள ஒரு தனியார் பால் பண்ணையில் வேன் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் வேலைக்கு செல்லும் போது தொட்டியத்தில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டிற்கு சென்று சாப்படுவது, ஓய்வு எடுப்பதை நாகராஜ் வழக்கமாக கொண்டிருந்தார். அப்போது அந்த வீட்டிலுள்ள 5-ம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமியை நாகராஜ் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாமன் உறவு முறை கொண்ட அவரின் அத்துமீறலை தாங்கிக்கொள்ள முடியாத சிறுமி தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார்.

    இதனைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் முசிறி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய போலீசார் நாகராஜ் பாலியல் தொல்லை அளித்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • சென்னை போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
    • மூன்று இடங்களில் பிரபாகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது.

    சென்னை:

    சென்னை போர் நினைவு சின்னம் அருகே கோட்டை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிரசன்ன வெங்கடேஷ் என்ற வக்கீல் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவரை வழிமறித்து போலீசார் ஆவணங்களை கேட்டனர். அப்போது அவர் தான் வக்கீல் என்று கூறி உள்ளார். இதன் பிறகும் ஆவணங்களை கேட்டதால் தகராறு ஏற்பட்டது. வக்கீல் என்று சொன்ன பிறகும் ஆவணங்களை கேட்கிறீர்களே என தகராறு செய்த பிரசன்ன வெங்கடேஷ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரனை, தாக்கியுள்ளார்.

    இதில் மூன்று இடங்களில் பிரபாகரனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தாக்குதலில் ஈடுபட்ட வக்கீல் பிரசன்ன வெங்கடேஷை கோட்டை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருத்தாசலத்தில் விபசார வழக்கில் வக்கீல் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    கடலுார்: 

    கடலுார் மாவட்டம் விருத்தாசலம் பகுதியில் ஆலடிரோட்டில் உள்ள ஒரு வீட்டில் விபசாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து மேலும் விசாரித்த போலீசார் வழக்குப் பதிவு செய்து இளம்பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய இரு பெண்கள் மற்றும் அங்கு வாடிக்கையாளராக இருந்த பிஞ்சனூர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் ராயர் (30) என்பவர் உட்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை பட்டினப்பாக்கத்தில் தாறுமாறாக ஓடிய கார் மோதியதில் 2 பேர் உயிரிழந்தனர். இது தொடர்பாக குடிபோதையில் இருந்த வக்கீலை போலீசார் கைது செய்தனர்.
    சென்னை:

    சென்னை துரைப்பாக்கம் ஸ்டேட் பேங்க் காலனியை சேர்ந்தவர் பென்ஸ்ரீகன் (37). சென்னை ஐகோர்ட்டு வக்கீல்.

    இவர் நேற்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜியின் வழியனுப்பு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் மாலை 4 மணியளவில் தனது ‘வோக்ஸ்வேகன்’ சொகுசு காரில் பட்டினப்பாக்கம் எம்.ஆர்.சி.நகர், டி.ஜி.எஸ்.தினகரன் சாலை வழியாக வக்கீல் பென்ஸ்ரீகன் வேகமாக சென்றார்.

    அப்போது அந்த கார் கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற மற்றொரு கார் மீது பயங்கரமாக மோதியது. அதே வேகத்தில் 3 மோட்டார் சைக்கிள்கள், ஒரு சரக்கு ஆட்டோ ஆகியவற்றின் மீதும் மோதியது.

    அப்போது, விபத்து நடந்த பகுதியின் அருகே பஸ்சுக்காக காத்து நின்றவர்கள் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். காரை வேகமாக ஓட்டி வந்த வக்கீலை அடித்து உதைத்தனர். கண் இமைக்கும் நேரத்துக்குள் நடந்த இந்த விபத்தில் 6 பேர் படுகாயம் அடைந்தனர்.

    ஏழுகிணறு பகுதியை சேர்ந்த அமீர்ஜகான் (35), சைதாப்பேட்டை அபுதா கீர் (32), மயிலாப்பூர் அருண் பிரகாஷ் (25), பழைய வண்ணாரப்பேட்டை இளையராஜா (39), கீழ்ப் பாக்கம் கார்டன் மார்க்கெரட் (25), நாமக்கல் மாவட்டம் பிரகாஷ் (39).

    படுகாயம் அடைந்த அனைவரும் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

    தகவல் அறிந்ததும் அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீஸ் இன்ஸ்பெக்டர் சோபனா சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினார். விபத்துக்கு காரணமான வக்கீல் பென்ஸ்ரீகன் கைது செய்யப்பட்டார்.

    போலீஸ் விசாரணையில் அவர் குடிபோதையில் கார் ஓட்டியது தெரியவந்தது. அவர் மீது குடித்து விட்டு கார் ஓட்டியது, வேகமாக கார் ஓட்டியது, கவன குறைவு உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    விபத்தில் காயம் அடைந்தவர்களில் அமீர்ஜகான், அபுதாகீர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி இன்று உயிர் இழந்தனர். அமீர்ஜகான் ஏழுகிணறு குட்டி மேஸ்திரி தெருவை சேர்ந்தவர். ‘பிசியோதெரபிஸ்ட்’ ஆக வேலை பார்த்து வந்தார். அபுதாகீர் சைதாப்பேட்டை துரைசாமி 2-வது தெருவை சேர்ந்தவர்.

    படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வரும் கீழ்ப்பாக்கம் கார்டன் மார்க்கெரட் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    வக்கீல் ஒருவரே குடித்து விட்டு கார் ஓட்டி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தி இருப்பது போலீசாரையும், பொதுமக்களையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
    சேலம் பெரியபுதூரில் பக்கத்து வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் அவரது காரை அடித்து உடைத்த வக்கீல் கைது செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் அழகாபுரம் பெரியபுதூர் பகுதியை சேர்ந்தவர் இளமாறன் (வயது 41). வக்கீலான இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவருக்கும் நேற்றிரவு தகராறு ஏற்பட்டது.

    தகராறு முற்றியதும் ஆத்திரம் அடைந்த இளமாறன், ராஜேஷ்குமாரின் காரை அடித்து உடைத்தார்.

    இது குறித்து ராஜேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த அழகாபுரம் போலீசார் இளமாறனை கைது செய்தனர்.

    சவூதி அரேபியாவில் கார் ஓட்ட பெண்களுக்கு தடை விலக்க சட்டம் இன்னும் அமலுக்கு வராத நிலையில், கார் ஓட்டியதாக 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    ரியாத்:

    சவுதி அரேபியாவில் பெண்களுக்கு பல சட்ட விதிகள் உள்ளன. அவர்கள் கார் ஓட்ட தடை, தங்களது வாழ்க்கை முடிவுகளை தந்தை, கணவர், சகோதரர், மகன் ஆகியோரின் ஆலோசனைப்படிதான் எடுக்க வேண்டும் என்பது போன்ற பல கட்டுபாடுகள் இருக்கிறது.

    சவுதி அரேபிய பட்டத்து இளவரசராக பொறுப்பேற்ற முகமது பின் சல்மான் பல்வேறு சீர்திருத்தங்களை செய்து வருகிறார்.
    இதற்கிடையே சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்ட இருந்த தடையை நீக்கி இளவரசர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டார்.

    பெண்கள் கார் ஓட்ட அனுமதி வருகிற ஜூன் மாதம் 24-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. இந்நிலையில், சட்டம் அமலுக்கு வராத நிலையில் கார் ஓட்டியதற்காக மாதர் நல ஆர்வலர்களான 7 பெண் வக்கீல்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக மனித உரிமை கண்காணிப்பு குழு தெரிவித்து உள்ளது.

    கடந்த 15-ந்தேதி முதல் இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இவர்களில் இமன் அல் நப்ஜன், லுரெயின் அல் ஹத்நுல், அசிசா அல்-யூசப் ஆகியோர் முக்கியமானவர்கள்.

    இதில் இமன்-அல்- நப்ஜன், லுரெயின் அல்-ஹத் நுல் ஆகியோர் ஏற்கனவே சவுதி அரேபியாவில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு காரை ஓட்டியதாக கைது செய்யப்பட்டு 75 நாட்கள் சிறையில் இருந்தவர்கள்.

    இவர்கள் 7 பேரும் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாகவும், நாட்டு பாதுகாப்புக்கு குந்தகம் 
    விளைவிப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், ஒற்றுமையை பிளவுபடுத்த முயற்சி செய்ததாகவும் கூறி அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    பெண்கள் கார் ஓட்ட தடையை நீக்க கோரி போராடியவர்கள் அந்த தடை நீக்கப்படுவதற்கு முன்பே தேசதுரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சமீபத்தில் பெண்கள் தங்கள் சொந்த நிறுவனங்களை நடத்த ஆண்களின் அனுமதியை நாட வேண்டிய சட்டத்தையும் பட்டத்து 
    இளவரசர் சல்மான் அகற்றினார் என்று குறிப்பிடத்தக்கது.
    சேலத்தில் அரசு பஸ் டிரைவரை வக்கீல் தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    சேலம்:

    சேலம் அயோத்தியாப்பட்டணம் அருகே உள்ள மாசிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் அன்பரசன் (வயது 47). இவர் நாமக்கல் கோட்டில் வக்கீலாக உள்ளார். தினமும் நாமக்கல்லுக்கு பஸ்சில் சென்று வருவார். இன்று காலையில் கோர்ட்டுக்கு செல்வதற்காக அயோத் தியாப்பட்டிணத்தில் இருந்து ஜங்சன் செல்லும் அரசு பஸ்சில் ஏறினார். பஸ்சை கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் ஓட்டிச் சென்றார்.

    பஸ் சீலநாயக்கன் பட்டி அருகே சென்ற போது வக்கீல் அன்பரசன் டிரைவரிடம் ஏன் பஸ்சை மெதுவாக ஓட்டி செல்கிறீர்கள் என்று வாக்குவாத்தில் ஈடுபட்டார். அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வக்கீல், டிரைவர் ராஜேந்திரனை அடித்தார். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் பஸ்சை நடு ரோட்டில் நிறுத்தி தகராறில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

    டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வக்கீல் அன்பரசனை கைது செய்தனர். சேலத்தில் அரசு பஸ் டிரைவரை தாக்கிய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியது.

    ×